திருவனந்தபுரம்: கூட்ட நெரிசலோடு ‘பரசுராம் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் செல்லும் மாணவர்கள், மயங்கி விழும் சம்பவங்களுக்கு ஒரு முடிவே இல்லை.
கடந்த நான்கு மாதங்களில் 18 பெண் பயணிகள் இந்த ரயிலில் மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் குறித்துப் புகார்கள் வந்தாலும், கூடுதல் ரயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.
‘வந்தே பாரத்’ ரயில் காரணத்தால் ‘பரசுராம் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையை நிறுத்துவது குறித்தும் முடிவேதும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, பிப்ரவரி 12ஆம் தேதி காலையில் பெண்களுக்கான ரயில் பெட்டியில் அதிகப்படியான கூட்டத்தில் சிக்கிய பள்ளி மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார்.
பயணிகள் விரைந்து சிறுமிக்குத் தண்ணீர் தந்ததை அடுத்து சிறுமி இறக்கிவிடப்பட்டார்.
இந்நிலையில், ‘பரசுராம் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் ரயில் பெட்டிகள் சேர்க்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டபோதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.