திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் தோப்பும்பாடி பகுதியில் உள்ளது ‘அவர் லேடி கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி’. இப்பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த பள்ளி முதல்வர் லிசி கடந்த சனிக்கிழமை தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவர் தங்கள் பள்ளியில் பாடம் படிக்க வந்த மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததோடு தனது சேவையை நிறுத்திக் கொள்ளவில்லை. வீடில்லாத ஏழை மாணவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து உதவும் சேவையையும் தனது பணியைத் தொடங்கும்போதே துவக்கினார்.
இதுவரை கேரளா முழுவதும் 199 வீடுகளை பள்ளி மாணவர்களுக்காக கட்டி முடித்து ஒப்படைத்திருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை பணி ஓய்வு பெறும்போது ஒரு வீட்டின் கட்டுமானப் பணி இன்னும் முழுமையடையாமல் இருந்தது. அதனையும் முடித்து இந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி 6ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் கையில் சாவியை ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
‘சஹ படிக்கொரு பவனம்’ (பள்ளித் தோழருக்கான வீடு) என்ற பெயரில் தொடங்கப்பட்டது லிசியின் இந்தப் புரட்சிகர இயக்கம்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய லிசி, “முதல் வீடு கட்டி முடிக்கப்பட்டபோது கையில் ரூ.25 ஆயிரம் தான் இருந்தது. அதைவைத்து ‘லேடிஸ் ஹவுஸ் சேலஞ்ச்’ என்ற திட்டத்தைத் தொடங்கினேன்.
“பிறருக்கு உதவுவதில் ஒருமித்த எண்ணம் கொண்டவர்களையும் சேவை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வீடற்ற ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து வருகிறோம்.
“முதலில் எங்கள் பள்ளி மாணவர்களின் குடும்பத்தின் மீதுதான் கவனம் குவிந்தது.
தொடர்புடைய செய்திகள்
“நாளடைவில், கேரள மாநிலத்தில் உள்ள வீட்டற்ற மாணவர்களைத் தேடத் தொடங்கினோம். அதன்பின்னர், திருச்சூரில் இருந்து திருவனந்தபுரம் வரை பல்வேறு மாவட்டங்களில் வீடுகளை கட்டி பயனாளிகளுக்கு வழங்கியிருக்கிறோம்,” என்கிறார்.
“எங்களது முயற்சியைப் பார்த்துவிட்டு ஒரு கொடையாளர் தனது 72 சென்ட் நிலத்தில் கட்டியிருந்த 17 வீடுகளை ஏழைகளுக்கு தானமாகத் தந்தார்.
“இன்னொரு குடும்பம் அரக்குன்னத்தில் 5 வீடுகளுடன் 22 சென்ட் நிலத்தை தானமாகத் தந்தது.
“தற்போது பட்டிமட்டத்தில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் 20 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கேரளத்தில் வீடற்ற ஏழைப்பிள்ளைகளே இருக்கக் கூடாது என்பதே எனது ஆசை,” என்கிறார் முன்னாள் பள்ளி முதல்வர் லிசி.

