புதுடெல்லி: இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் வலுவான வளர்ச்சி அடைந்து உள்ளது. ஒட்டுமொத்தமாக 15 விழுக்காடு விற்பனை உயர்ந்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் விற்பனை 15 விழுக்காடும், 3 சக்கர வாகனங்கள் 37 விழுக்காடும், பயணிகள் வாகனங்கள் 13 விழுக்காடும், டிராக்டர்கள் 21 விழுக்காடும், வர்த்தக வாகனங்கள் 0.1 விழுக்காடும் விற்பனை அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“கிராமப்புறச் சந்தை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கான தேவை வலுவாக உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை புதிய உயர்வை அடைந்தது. 3,93,250 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2023 நவம்பர் மாத விற்பனை சாதனையை இது முறியடித்து உள்ளது.
“இருப்பினும் வாகனங்கள் அதிக இருப்பு நிலை தொடர்ந்து கவலையாக உள்ளது. இது இன்னும் 50-55 நாள் வரம்பில் உள்ளது. இது வாகன விற்பனையாளர்களுக்கு சவாலாக உள்ளது. டிராக்டர் பிரிவின் விற்பனையும் முந்தைய மாதங்களில் மந்த நிலைக்குப்பிறகு தற்போது உயர்வை அடைந்து உள்ளது,” என்று அந்தக் கூட்டமைப்பு கூறியது.

