அபுதாபி: ஐக்கிய அரபு சிற்றரசுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் சுவாமி நாராயண் கோயிலுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.
அபுதாபியின் முதல் இந்துக் கோயிலான இது, வடஇந்தியர்களின் நாகரா கட்டடக்கலை பாணியில் எழுப்பப்பட்டு உள்ளது. அயோத்தியில் அண்மையில் திறக்கப்பட்ட ராமர் கோயிலும் இதே பாணியில் கட்டப்பட்டது.
இருப்பினும், ஐக்கிய அரபு சிற்றரசுகளின் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையிலும் அந்தக் கோயிலின் வடிவம் உள்ளது. கங்கை புனித நீரால் செயற்கை ஆறு ஒன்றும் அங்கு உருவாக்கப்பட்டு உள்ளது.
இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல், வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் ஆகியவற்றால் இந்தக் கோயில் கட்டப்பட்டு உள்ளது.
இதற்காக, ராஜஸ்தானிலிருந்து சுமார் 18 லட்சம் செங்கற்கள், 1.8 லட்சம் கன மீட்டர் அளவுள்ள மணற்கற்கள் அபுதாபிக்குக் கொண்டு செல்லப்பட்டன.
2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியில் கோயில் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார்.
அத்துடன் கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை ஐக்கிய அரபு சிற்றரசுகள் அரசாங்கம் கடந்த 2019ம் ஆண்டு கொடுத்தது. அதனையடுத்து, 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நாராயண் கோயிலைக் கட்ட பிரதமர் மோடி அப்போது அடிக்கல் நாட்டினார்.

