விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மத்திய அரசு

விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மத்திய அரசு

2 mins read
1e7380ee-942f-4732-aede-53389705325e
மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லியை நோக்கி விவசாயிகளின் பேரணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்த நிலையில், புதிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியுள்ளார்.

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி 2வது நாளாக டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடர்ந்து வருகின்றனர்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும் 200 விவசாய அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளன.

இந்நிலையில், ஹரியானா மாநிலம், ஷம்பு எல்லையில் பேரணியாகச் சென்ற விவசாயிகள் மீது ஆளில்லா வானூர்தி மூலம் இரண்டாவது நாளாக நேற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

ஹரியானா மாநிலத்துடனான சிங்கு, டிக்ரி எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கெனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி, அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது விவசாயிகள் மீண்டும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருவதால் அரசியல் ரீதியாக அரசுக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் எழுந்துள்ளது. அத்துடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளை மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அனைத்து தரப்பினரையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும்.

“பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சூழலை விவசாயிகளிடம் எதிர்பார்க்கிறோம். விவசாய சங்கங்களுடன் நேர்மறையான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான எங்கள் முயற்சிகள் தொடரும் என நான் ஏற்கெனவே கூறியிருந்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதிய கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைப்பதாக மத்திய அரசு கூறிய குற்றச்சாட்டுக்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

2020ல் மத்திய அரசு எழுத்துபூர்வமாக உறுதி அளித்த வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றும்படி கேட்பதாக விவசாயிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்களுடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“நாங்கள் எதிரி நாட்டிலிருந்து வந்தவர்கள் போல் காவலர்கள் எங்களை நடத்துகிறார்கள்,” என்று டெல்லியில் இருந்து சாலைமார்க்கமாக 415 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சாப்பின் கபுர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி மோகன் சிங் கூறினார்.

“நாங்கள் செய்ய விரும்புவது டெல்லிக்குச் சென்று எங்கள் உரிமைகளைக் கேட்பதுதான், ஆனால் எங்களில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்,” என்றார்.

ஹரியானா மாநில காவல்துறை செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை மீது கற்கள் வீசப்பட்டதாகவும் இதில் 24 அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்