கர்நாடக துணை முதல்வர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு: லோக் ஆயுக்தா அதிரடி

கர்நாடக துணை முதல்வர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு: லோக் ஆயுக்தா அதிரடி

2 mins read
8a235d57-f674-4419-b68e-84ee878848ef
கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார். - படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மீது அம்மாநில லோக் ஆயுக்தா காவலர்கள் சொத்துக்குவிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமாரின் வீடு, அலுவலகங்களில் கடந்த பாஜக ஆட்சி நடந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத‌ ரூ.74 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கின.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற‌ப்பட்டது.

அதன்பேரில் டி.கே.சிவகுமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவு செய்து சிபிஐ விசாரித்து வந்த நிலையில், தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சிபிஐ விசாரணையை மாநில அரசு 2 மாதங்களுக்கு முன் வாபஸ் பெற்றது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.சோமசேகர், உமேஷ் எம் அடிகா விசாரித்தனர்.

அப்போது, லோக் ஆயுக்தா தரப்பில் முன்னிலையான அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ் அரபட்டி, இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்த்துக்கொள்ள கோரி மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் அடுத்த கட்டமாக கர்நாடக மாநில லோக் ஆயுக்தா காவலர்கள் டி.கே.சிவகுமார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். ஆனால் இது வழக்கை திசை திருப்பும் முயற்சி என பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்