கெஜ்ரிவால் அடுத்த மாதம் நீதிமன்றம் வர உத்தரவு

கெஜ்ரிவால் அடுத்த மாதம் நீதிமன்றம் வர உத்தரவு

2 mins read
84985971-3be7-4416-bd55-f581b4b091fe
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணைக்கு நேரில் வரக் கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் முன்னிலையாகவில்லை.

இதனிடையே, அவர் முன்னிலையாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை (பிப்ரவரி 17) விசாரணைக்கு நேரில் வருமாறு டெல்லி நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது ஆறாவது அழைப்பாணை.

அந்த அழைப்பாணையை ஏற்று கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை நேரில் முன்னிலையாவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வழக்கு விசாரணைக்கு நேரில் வருவதைத் தவிர்த்து அவர் காணொளி வாயிலாக முன்னிலையானார்.

டெல்லி சட்டப்பேரவையில் சனிக்கிழமை அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம், பட்ஜெட் கூட்டத்தொடர் போன்றவை நடைபெறுவதால், நீதிமன்றத்திற்கு நேரில் வரமுடியவில்லை என கெஜ்ரிவால் அப்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் ரமேஷ் குப்தா, அடுத்த விசாரணை தேதியில் டெல்லி முதல்வர் நேரில் முன்னிலையாவார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் நேரில் முன்னிலையாக கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லி சட்டசபையில் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் கெஜ்ரிவால் அரசாங்கம் வெற்றி பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது குறித்து பேசிய கெஜ்ரிவால், “ஆம் ஆத்மியின் ஒரு எம்.எல்.ஏ.கூட பிரிந்து செல்லவில்லை,” என்றார்.

“இரண்டு உறுப்பினர்களுக்கு உடல்நலம் சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை. மூன்று உறுப்பினர்கள் சொந்த பணி காரணமாக வெளியூர் சென்றுவிட்டனர். இரண்டு பேர் சிறையில் உள்ளனர். ஒருவர், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்,” என்றார்.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 தொகுதிகளும் பா.ஜனதாவுக்கு 8 தொகுதிகளும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்