15 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவுக்கு வரும் கிரேக்கப் பிரதமர்

1 mins read
3a7709c3-4253-4196-b1a0-34bf2bae7057
கிரேக்க நாட்டுப் பிரதமர் கிரியாகோஸ் மித்சோடாகிஸுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: கிரேக்க நாட்டுப் பிரதமர் ஒருவர் 15 ஆண்டுகளில் முதன்முறையாக இப்போது இந்தியாவுக்கு வரவிருக்கிறார். கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மித்சோடாகிஸ் வரும் 21, 22 ஆகிய நாள்களில் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொள்கிறார். அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் வர்த்தகக் குழு ஒன்றும் வருவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில் கிரேக்கப் பிரதமரின் இந்தப் பயணம் அமைகிறது. இதனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்து உள்ளது.

புதுடெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதன்பின்னர், இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்.

புதுடெல்லியில் நடைபெறும் 9வது ரெய்சினா கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்வார். பிரதமர் மோடி, விருந்தினர்களுக்கு நண்பகல் விருந்தும் அளிக்க இருக்கிறார். கிரேக்க பிரதமர் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு, மும்பைக்குச் செல்லவும் திட்டமிட்டு உள்ளார்.

கடைசியாக 2008ஆம் ஆண்டில், கிரேக்க நாட்டின் பிரதமராக இருந்த கொஸ்டாஸ் கரமன்லிஸ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டோரா பகோயான்னிஸ் உடன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு 15 ஆண்டுகள் கழித்து கிரேக்கப் பிரதமரின் இந்தியப் பயணம் அமைகிறது.

கடந்த 2023 ஆகஸ்டு மாதத்தில் கிரேக்க நாட்டுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டதில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்