இந்தியாவில் ஆட்டோகாரர் ஒருவர் விநோதமான முறையில் பெண் தேடுகிறார்.
தனது ஆட்டோ ரிக்ஷாவில் அவர் சொந்த விவரங்களை அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைத்துள்ளார் என்று பிப்ரவரி 18ஆம் தேதி இந்தியா டுடே தகவல் வெளியிட்டுள்ளது.
தாமோ நகரைச் சேர்ந்த திரு தீபேந்திர ரத்தோர் இந்தியா டுடேயிடம் பேசியபோது, “தனது சமூகத்தில் மணமகள் பற்றாக்குறை இருப்பதால் பொருத்தமான துணையைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது,” என்று கூறியுள்ளார்.
ஒற்றையர்களுக்கு வாழ்க்கைத் துணையைக் கண்டறிய உதவும் ஒரு திருமணப் பதிவு குழுவில் அவர் சேர்ந்தார். ஆனால் அங்கேயும் அவரது சொந்த ஊரில் அவருக்கு பொருத்தமான பெண் கிடைக்கவில்லை
இதனால் வழக்கத்துக்கு மாறாக தனது ஆட்டோவில் தன்னை விளம்பரப்படுத்தும் செயலில் அவர் இறங்கினார்.
அந்த விளம்பரத்தில் அவரது உயரம், பிறந்த தேதி, பிறந்த நேரம், ரத்த வகை, கல்விப் பின்னணி மற்றும் கோத்திரம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.
திரு தீபேந்திரா, சாதி, மத பேதமின்றி பெண்ணை மணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பதில் திரு தீபேந்திராவின் தனித்துவமான அணுகுமுறை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒருவர், தீபேந்திரா போல தனது தனிப்பட்ட விவரங்களை வெளிப்படையாக விளம்பரப்படுத்துவது அரிது.
திரு தீபேந்திரா, ஆட்டோ மூலம் ஈட்டப்படும் வருமானத்தை நம்பிதான் தனது குடும்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
“எனது பெற்றோர் வழிபாடுகளில் தீவிரமாக உள்ளனர். எனக்கு ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. எனவே நான்தான் கண்டுபிடித்தாக வேண்டும்,” என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

