தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கமல்நாத் காங்கிரசில் தொடர்வதாக ம.பி. காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம்

3 mins read
ab775fa9-2d58-4f34-a83b-079a06d6cae5
திக் விஜய் சிங். - படம்: ஊடகம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்தும் அவரது மகன் நாகுல் நாத்தும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரவுள்ளதாக கடந்த இரு தினங்களாகச் செய்திகள் வௌியாகி வருகின்றன.

இந்தத் தகவலை அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி மறுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணம் தொடர்வதாகவும் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தி சதி என்றும் கமல்நாத் கூறியதாக ஜித்து பத்வாரி தெரிவித்துள்ளார்.

“ஊடகச் செய்திகள் எதுவும் உண்மையல்ல. காங்கிரஸ்காரனாகவே இருந்தேன்; இனியும் எப்போதும் காங்கிரஸ்காரனாகவே இருப்பேன்,” என கமல்நாத் தன்னிடம் தெரிவித்ததாக ஜித்து பத்வாரி கூறினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஊடகங்களைப் பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. ஒருவரின் மன உறுதியை கேள்விக்குறி ஆக்குகிறது.

“நான் கமல்நாத்திடம் பேசியபோது, தான் எங்கேயும் போகவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் தொடர்வதாகவும் கூறினார். ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சதியின் ஒரு பகுதி,” என அவர் தன்னிடம் தெரிவித்ததாக ஜித்து பத்வாரி கூறியுள்ளார்.

“காந்தி குடும்பத்துடனான கமல்நாத்தின் உறவு அசைக்கமுடியாதது. காங்கிரஸ் கொள்கைகளை கடைப்பிடித்து அவர் வாழ்ந்து வருகிறார். கடைசிவரை அவர் அப்படியே இருப்பார். இது அவர் என்னிடம் தெரிவித்தது,” என்று தெரிவித்தார்.

இதனை கமல்நாத் ஏன் ஊடகங்களிடம் தெளிவுபடுத்தவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “சரியான நேரத்தில் அவர் இதுகுறித்து பேசுவார். தற்போது நான் என்ன தெரிவித்தேனோ அவை அனைத்தும் அவர் சார்பாகக் கூறியதுதான்,” என்றார் ஜித்து பத்வாரி.

இந்நிலையில், கமல்நாத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் சிங் வர்மா, கமல்நாத்தை டெல்லியில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“நான் கமல்நாத்துடன் ஆலோசித்தபோது, மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவது பற்றி தான் யோசிக்கவில்லை என்றும், அது தொடர்பாக யாரிடமும் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.

“வெளியாகி உள்ள செய்தியை நீங்கள் மறுக்கவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன என்று நான் சொன்னபோது, ஊடகங்கள்தான் அதனை எழுப்பின. அவர்கள்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்,” என்று கமல்நாத் கூறினார் எனத் தெரிவித்தார்.

காங்கிரசை விட்டு கமல்நாத் போகமாட்டார்: திக் விஜய் சிங்

இதனிடையே, கமல்நாத் காங்கிரசை விட்டு எங்கும் செல்லவில்லை, செல்லவும் மாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல்நாத், அக்கட்சியை விட்டு வௌியே போகமாட்டார்.

“அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என பாஜக அரசு தரும் எல்லா நெருக்கடிகளையும் கமல்நாத் சமாளிப்பார்,” எனத் தெரிவித்தார்.

கமல்நாத் பாஜகவில் இணையப் போகிறார் என்ற பரபரப்புக்கு காங்கிரஸ் தலைவர்கள் அளித்துள்ள இந்தப் பதில் உண்மையானதுதானா என்பது விரைவில் தெரிய வரும்.

குறிப்புச் சொற்கள்