லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ‘இந்தியா’ கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த அம்மாநில காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்துள்ள சூழலில், “பகுஜன் சமாஜ் கட்சி எந்நேரத்திலும் தங்களுடன் இணையலாம். ‘இந்தியா’ கூட்டணியின் கதவுகள் திறந்தே உள்ளன,” என்று உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியில் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும் உள்ளதை அடுத்து, மாயாவதியும் இணைந்தால் பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பெருமளவில் பெறமுடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையாக உள்ளது.
“மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் இணைவதை விரும்புகிறோம். கூட்டணி சேரப் போவதில்லை என்று மாயாவதி ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்தியா கூட்டணியில் அவர் இணைவதற்கு எந்நேரமும் கதவுகள் திறந்தே உள்ளன,” என்று அவினாஷ் பாண்டே மேலும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக வலிமையான கட்சியாக உள்ளது. அண்மையில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், அது அக்கட்சிக்கு தேர்தல் ரீதியாகவும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘இந்தியா’ கூட்டணிக்கு பலம் சேர்க்க அதில் சேருமாறு அவினாஷ் பாண்டே மீண்டும் மாயாவதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை எதிர்கொள்ள பிற கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி வருகிறோம்.
“தொகுதிப் பங்கீடு விஷயத்தில் அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும். சில கட்சிகள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி ‘இந்தியா’ கூட்டணியில் இணைகின்றன. ஆனால், ஒரு சில கட்சிகள் கூறும் நிபந்தனைகளை பேசித்தான் தீர்க்க வேண்டும்.
“ஜெயந்த் சௌத்ரி தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது துரதிருஷ்டவசமானது.
“காங்கிரசின் தூணாக சோனியா காந்தி எப்போதும் உள்ளார். அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது. உத்தரப் பிரதேசத்தில் அமேதி, ரேபரேலியில் ராகுல் காந்தியும் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அது குறித்து கட்சி பரிசீலிக்கும்,” என்று அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.