புவனேஸ்வர்: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்த மாநில முதல்வருக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளது? எந்த மாநிலத்தில் வளர்ச்சிக்கான செயல்பாடுகள் அதிகம் உள்ளன என்பது குறித்து ஊடகம் ஒன்று அண்மைய கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குள்ள முதல்வராகவும் மாநில வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு 52.7 விழுக்காடு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு கிடைத்துள்ளது. அவர் மாநிலத்தில் 51.3 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பிடித்துள்ளார். அவர் 48.6 விழுக்காடு மதிப்பீட்டை பெற்றுள்ளார். நான்காவது இடத்தை 42.6 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பிடித்துள்ளார்.
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா 41.4 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் மதிப்புமிக்க முதல்வர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
திரிபுரா மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் செல்வாக்கு பெற்றவராக இவர் திகழ்வதாகக் கூறப்படுகிறது.
மாணிக் சாஹாவின் எளிமை, அர்ப்பணிப்பு, நேர்மை, அவரது தலைமையின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்காக திரிபுரா மக்கள் அவரை மக்களின் முதல்வர் என்றே பெருமையுடன் அழைக்கின்றனர். தங்களுடைய இன்பத்திலும், துன்பத்திலும் பங்குகொள்ளும் இரக்கமுள்ள தலைவராக மாணிக் சாஹா விளங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பல் மருத்துவரான மாணிக் சாஹா மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல்வாதியாக மாறியவர்.
“மக்களின் முன்னேற்றத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் மாணிக் சாஹாவுக்குத்தான் என்னைப் பொருத்தவரையில் முதலிடம் கிடைக்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்ற எளிய முதல்வரைப் பார்த்ததில்லை,” என திரிபுரா தொழிலதிபர் ஒருவர் கூறியுள்ளார்.

