வடக்கு-தெற்கு வரி தொடர்பான விவாதம் இந்தியாவில் அரசியல் விவகாரமாக மாறியுள்ளது

வடக்கு-தெற்கு வரி தொடர்பான விவாதம் இந்தியாவில் அரசியல் விவகாரமாக மாறியுள்ளது

2 mins read
b06717d2-d6eb-4450-924c-117032fb2fcf
மக்கள் தொகை அதிகமுள்ள, தென்மாநிலங்களைப் போல அவ்வளவு வளர்ச்சி காணாத வடமாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதாக தென்மாநில அரசாங்கங்கள் கூறுகின்றன. - படம்: ஏஎஃப்பி

பெங்களூரு: இந்தியாவின் மத்திய அரசு வசூலிக்கும் வரிப் பணத்தில் தங்களுக்குக் கூடுதல் பங்கு கிடைக்க வேண்டும் என்று தென்மாநிலங்கள் குரல் எழுப்பியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தென்மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்கு குறைந்துள்ளதாக அவை குறைகூறுகின்றன.

இந்த விவகாரம் குறித்து அண்மை வாரங்களாக தென்மாநில அரசியல் தலைவர்கள் தலைநகர் புதுடெல்லியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, தென்மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி நாளிதழ்களில் முழுப் பக்கம் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர்.

‘தென்மாநிலங்கள் வரி இயக்கம்’ எனும் பெயரின்கீழ் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமை தாங்கினார்.

இந்த விவகாரம் தென்மாநிலங்களுக்கும் வடமாநிலங்களுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் ஒருவித அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் வடமாநிலங்களைவிட தென்மாநிலங்கள் நிதி அளவில் வலுவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் வடமாநிலங்களின் மக்கள்தொகை தென்மாநிலங்களைவிட அதிகம்.

மக்கள் தொகை அதிகமுள்ள, தென்மாநிலங்களைப் போல அவ்வளவு வளர்ச்சி காணாத வடமாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்குவதாக தென்மாநில அரசாங்கங்கள் கூறுகின்றன.

இந்தியாவின் நிதி ஆணையம் பரிந்துரை செய்யும் அளவைவிட தென்மாநிலங்களுக்குக் குறைவான நிதி ஒதுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தொழில்துறை, பொருளியல் நடவடிக்கைகள் ஆகியவை மூலம் வடமாநிலங்களைவிட தென்மாநிலங்கள் கூடுதல் பங்களிப்பதாக கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய தென்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் தென்மாநில அரசியல் கட்சிகள் இந்தியாவை வடக்கு-தெற்கு எனப் பிரிப்பதாகப் பிரதமர் மோடி பிப்ரவரி 17ஆம் தேதியன்று கண்டனம் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு எதிராகத் தாம் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதில்லை என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்