புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதியை வரும் மார்ச் 9ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிக்கட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் செல்லும் இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வு நடத்த உள்ளனர்.
எனவே,வரும் மார்ச் 9ஆம் தேதிக்குப் பிறகு மக்களவை பொதுத் தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம்தேதி மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
2019 ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

