திருமணம் ஆனதால் ராணுவத்தில் இருந்து பணிநீக்கம்: தாதிக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருமணம் ஆனதால் ராணுவத்தில் இருந்து பணிநீக்கம்: தாதிக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

1 mins read
a342f752-eb28-4c28-8d06-be5f85de888f
திருமணம் ஆவதன் அடிப்படையில் ஒரு பெண்ணை பணிநீக்கம் செய்தல் பாலின பாகுபாட்டின் மோசமான நிலை என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு சுட்டியது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: திருமணமான காரணத்தால் ராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் தாதிக்கு ரூ.60 லட்சம் (S$97,250) இழப்பீடு வழங்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் செலினா ஜான் ஒரு தாதியாக இருந்தார். லெப்டினன்ட் அதிகாரத்தில் பணியாற்றிய இவர், 1988ஆம் ஆண்டு திருமணம் ஆனதால் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து, அவர் 2012ஆம் ஆண்டில் ராணுவ தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தீர்ப்பாயம், பணிநீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் செலினாவைப் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

ஆனால், 2019ல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

திருமணம் ஆவதன் அடிப்படையில் ஒரு பெண்ணை பணிநீக்கம் செய்தல் பாலினப் பாகுபாட்டின் மோசமான நிலை என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு சுட்டியது.

பாலினச் சார்பு அடிப்படையில் எந்த ஒரு சட்டமும் அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படாது. இவ்வாறு திருமணத்தைக் காரணம் காட்டி ராணுவத் தாதியர் சேவையில் இருந்து பெண்களைப் பணியில் இருந்து நீக்குவதற்காக 1977ல் கொண்டு வரப்பட்ட சட்டம், 1995ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அத்துடன், செலினா ஜானுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்