புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம், அக்டோபரில் தொடங்கும் 2024-25ஆம் ஆண்டு பருவத்தில் சர்க்கரை ஆலைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340 வீதம் விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்யும்.
மத்திய அரசு, கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.25 உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்ததை அடுத்து, விவசாயிகள் நலனில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வியாழக்கிழமை காலை அவர் வெளியிட்ட அந்தப் பதிவில், “நாடு முழுவதும் உள்ள நமது விவசாய சகோதர சகோதரிகளின் நலன் தொடர்பான ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
“இந்தச் சூழலில், கரும்பு கொள்முதல் விலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்,” என்று அதில் கூறியுள்ளார்.

