மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே இதுவரை 39 தொகுதிகள் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் மகராஷ்டிராவில் தொகுதி உடன்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார் பிரிவு) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் அடுத்தடுத்து தொலைபேசியிலும் நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளில் மும்பை தெற்கு மத்தி, மும்பை வடக்கு மத்தி மற்றும் மும்பை வடமேற்கு ஆகிய மூன்றில் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது.
அதேசமயம், மும்பை - மும்பை தெற்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு மற்றும் மும்பை தெற்கு மத்தி ஆகிய நான்கு தொகுதிகள் உட்பட மாநிலத்தில் உள்ள 18 மக்களவைத் தொகுதிகளில் சிவசேனா (உத்தவ் அணி) போட்டியிட விரும்புவதாக தெரிகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் இதுவரையிலும் 39 தொகுதிகளில் இந்த மூன்று கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இழுபறியில் 9 தொகுதிகள்
தென் மத்திய மும்பை, வடமேற்கு மும்பை உள்ளிட்ட 9 தொகுதிகளில் இந்த 3 கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. தென் மத்திய மும்பை, வடமேற்கு மும்பை ஆகிய தொகுதிகளை சிவசேனா (உத்தவ் பிரிவு), காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கேட்கின்றன.
மேலும், பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி 5 இடங்களை கேட்பதால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் 47 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இதுபோல் 2019 சட்டப்பேரவை தேர்தலில் 236 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் பிரகாஷ் அம்பேத்காரின் கட்சி தங்களுக்கு ஐந்து இடங்கள் வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இண்டியா கூட்டணி
இண்டியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறவில்லை. குறிப்பாக, காங்கிரசுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்தது.
இந்நிலையில், டெல்லி, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடனும் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் கட்சி சுமூகமாக முடித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜி தொடர்ந்து அறிவித்து வந்தார். இருப்பினும் இப்போது மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரசுக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி இணைந்து போட்டியிட மம்தா பானர்ஜி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்ஆத்மி கட்சி
ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் மட்டும்தான் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. டெல்லி, குஜராத் உட்பட 5 மாநிலங்களில் காங்கிரசுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
டெல்லியில் வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ள நிலையில் மொத்தமுள்ள தொகுதிகளை 4க்கு 3 என்ற வீதத்தில் பிரித்துக் கொள்ள இரண்டு கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. மேலும் குஜராத், ஹரியானா, கோவா மற்றும் சண்டிகரிலும் இரு கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளன.

