இந்தியாவில் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்

இந்தியாவில் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்

2 mins read
64e197b2-9a75-4aa4-a75f-93388ae33e06
படம். - தமிழ் முரசு

இந்தியாவில் பிரிட்டிஷ் கால குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய அந்த மூன்று சட்டங்களும் ஜூலை 1ஆம் தேதி நடப்புக்கு வரும் என்று சனிக்கிழமையன்று (பிப்ரவரி 24) இந்திய அரசு வெளியிட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்டது.

பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நாகாரிக் சன்கிதா, பாரதிய சாக்‌ஷிய அதிநியம் என்று அந்த மூன்று சட்டங்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளன.

இந்த மூன்று சட்டங்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய அந்த மூன்று சட்டங்களுக்கும் இந்திய அதிபர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இந்த மூன்று சட்டங்களும் இந்திய சாட்சிய சட்டம், 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, குற்றவியல் தண்டனைச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்டுள்ளன.

புதிய சட்டங்கள், பயங்கரவாதம், கூட்டமாகச் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வது, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பது ஆகியவற்றுக்கு எதிராகக் கடும் தண்டனைகளைக் கொண்டுள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் இடம்பெற்றிருந்த 19 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக, புதிய பாரதிய நியாய சன்கிதாவில் புதிதாக 20 குற்றச்செயல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 33 குற்றச்செயல்களுக்கான சிறைத் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் 83 பிரிவுகளில் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது, 23 குற்றச்செயல்களுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு வகையான குற்றச்செயல்களுக்கு சமூக சேவை தண்டனை என்ற புதிய தண்டனை அறிமுகம் காண்கிறது.

புதிய குற்றவியல் சட்டங்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் சிறார் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாலினம் என்ற பிரிவில் மூன்றாம் பாலினத்தவர் என்ற அடையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஆவணம் என்பது மின்னியல், மின்னிலக்கத் தகவல் பதிவுகளை உள்ளடக்கும். அசையும் பொருள்கள் என்ற சொல் அனைத்து விதமான பொருள்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
புதிய சட்டம்