பாஜகவில் இணையும் வதந்திக்கு கமல்நாத் முற்றுப்புள்ளி

பாஜகவில் இணையும் வதந்திக்கு கமல்நாத் முற்றுப்புள்ளி

2 mins read
3a6e487b-d718-4eb2-8b19-aa8d99c9ca31
கமல்நாத், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி. - படம்: இந்திய ஊடகம்

போபால்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் பாஜகவில் இணையப் போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கமல்நாத்துடன் அவரது மகன் நகுல்நாத் எம்.பி.யும் பாஜகவில் இணையவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் தீயாகப் பரவின.

இந்தத் தகவல் குறித்து கமல்நாத் வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்காததால் அரசியல் வட்டாரத்தில் குழப்பம் நிலவியது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில், கமல்நாத்தும் பாஜகவில் இணையப் போவதாக பரவிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையடுத்து, பாஜக-கமல்நாத்தின் ஆடுபுலி ஆட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்திலிருந்து மத்தியப் பிரதேச காங்கிரசின் முக்கிய தூணாக இருந்து வரும் கமல்நாத்தை தக்கவைக்க காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சிகளில் இறங்கியது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கமல்நாத்தை சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, “பாஜகவுக்கு கமல்நாத் தேவையில்லை, அவருக்கான பாஜகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன,” என மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறினார்.

இந்நிலையில், கமல்நாத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை வரவேற்பதில் மத்தியப் பிரதேச மக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகமாக உள்ளனர்.

“எங்கள் தலைவர் ராகுல் காந்தி, நாடெங்கும் தெருக்களில் இறங்கி அநீதி, அடக்குமுறை, சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் இதில் கலந்துகொண்டு அவரது பலமாகவும் தைரியமாகவும் மாறுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து அநீதிக்கு எதிராகப் போராடுவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் கமல்நாத் தான் காங்கிரசில் தொடர்வதை உறுதி செய்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்