புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீட்டில் கூட்டுறவுத் துறையால் 11 மிகப்பெரிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கும் திட்டப்பணிகளைப் பிரதமர் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டமாக இருக்கும் என அவர் இத்திட்டத்தைப் பாராட்டினார்.
புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில், 11 மாநிலங்களில், 11 பி.ஏ.சி.எஸ்., எனப்படும் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களின் கிடங்குகளை மோடி தொடங்கி வைத்தார்.
மேலும், 18,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதைத் தவிர, 500 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் கிடங்கு மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் இறக்குமதியை பெருமளவில் இந்தியா குறைத்து தற்சார்பு பெற வேண்டும், இதற்கு கூட்டுறவுத்துறை தான் நடவடிக்கை எடுக்க முடியும்,” என இந்நிகழ்ச்சியில் உரையாற்றியபோது மோடி கூறினார். இத்திட்டம் நாட்டில் வேளாண் உட்கட்டமைப்புக்கு ஒரு புதிய விரிவாக்கத்தை அளித்து வேளாண்மையை நவீன தொழில்நுட்பத்தோடு இணைக்கும் ஒரு பகுதி என அவர் குறிப்பிட்டார்.
“விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகள் போதிய அளவில் இல்லாமல் இருந்தன. அதைப்போக்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும், இரண்டு லட்சம் சங்கங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மீன் வளம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கானவை அதிகமாக இருக்கும்,” என்றார் மோடி.

