தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்ததற்காக திரிபுரா முதன்மை வன அதிகாரி பணியிடைநீக்கம்

1 mins read
183f207e-0ba0-45e6-a94a-5d7d4b2fcf8f
சீதா மற்றும் அக்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள சிங்கங்களுக்கு வேறு பெயரை மாற்றுமாறு கோல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. - படம்: இந்திய ஊடகம்

அகர்தலா: சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்ததற்காக இந்தியாவின் திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு பணியிடைநீக்கம் செய்தது. சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைக்க கூடாது என இந்துத்துவ அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. ஏழு வயது உள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் எனவும் ஆறு வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா எனவும் பெயரிடப்பட்டது.

இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகக் கூறி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சிங்கத்தின் பெயர் வழக்கை கோல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா விசாரித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சிங்கங்களுக்கு எதற்காக கடவுள், சுதந்திர போராட்ட வீரர், மன்னர்கள் பெயரை சூட்டுகிறீர்கள்? சிங்கத்திற்கு சீதை மட்டுமல்ல அக்பர் என பெயரிட்டதையும் ஏற்க முடியாதது. எனவே பெயரை மாற்றி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,’’ என கேட்டுக்கொண்டு, வழக்கை பொதுநல மனுவாக மாற்றி தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

மேலும் சீதா மற்றும் அக்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள சிங்கங்களுக்கு வேறு பெயரை மாற்றுமாறு கோல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்