மும்பை: மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனால், அங்கு பதற்றம் நிலவியதால் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்குள்ள மூன்று மாவட்டங்களில் இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டம், தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் அரசுப் பேருந்தை திங்கள்கிழமை காலை போராட்டக் குழுவினர் தீவைத்து எரித்தனர்.
இதையடுத்து ஜல்னா மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.
பேருந்து தீவைப்புச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளூர் காவல்நிலையத்தில் அம்பாட் பேருந்து நிலைய மேலாளர் புகார் அளித்தார்.
இதையடுத்து மறு அறிவிப்பு வரும்வரை பேருந்துகளை இயக்குவதற்கு மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, அரசுப் பணிகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒருமனதாக கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (ஓபிசி) பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும், மராத்தா சமூகத்தினர் குன்பி சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற அறிவிப்பை சட்டமாக இயற்றி நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜாரங்கே பாட்டீல் ஜல்னா மாவட்டம், அந்தர்வாலி சாரதி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி புனே - சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சகால் மராத்தா சமாஜ் அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மனோஜ் ஜாரங்கே போராட்டத்துக்கு மேலும் ஆதரவாளர்கள் கூடுவதைத் தவிர்க்கவும் அவர்கள் மும்பைக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கிலும் ஜல்னா, சத்ரபதி சம்பாஜி நகர், பீட் ஆகிய மாவட்டங்களில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி மனோஜ் ஜாரங்கே மிகப்பெரிய போராட்டத்தை கடந்த மாதம் அறிவித்திருந்தார். அரசு கொண்டுவந்த 10 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டுக்குப் பிறகு இப்பிரச்சினை ஓயும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை எனக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்து வருவது மகாராஷ்டிரா அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

