தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆறு ஆண்டுகளில் காவலில் இருந்த 275 பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

2 mins read
2aa3ae0e-eedf-4483-ad28-9bc72af890d9
படம் - ஊடகம்

புதுடெல்லி: கடந்த ஆறு ஆண்டுகளில் விசாரணை அமைப்புகளின் காவலில் இருந்த 275 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறை, கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கும் பெண்களில் ஒரு சிலர், பாதுகாப்புக்காக அல்லது வேறு விவகாரங்களுக்காக காவலர்களின் பாதுகாப்பில் இருக்கும் சமயத்தில் கூட பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.

இதுதொடர்பாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2017 முதல் 2022ஆம் ஆண்டு வரை விசாரணை அமைப்புகளின் காவலில் இருந்த 275 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தப் பெண்கள் காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஆயுதப் படையினர், சிறை ஊழியர்கள், காப்பகம், மருத்துவமனை, பெண்கள் காவலில் வைக்கப்படும் இடங்களிலும் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

கடந்த 2017ல் 89, 2018ல் 60, 2019ல் 47, 2020ல் 29, 2021ல் 26, 2022ல் 24 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும் பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் தர முன்வருவதில்லை என்கின்றனர் மகளிர் உரிமை அமைப்பினர்.

இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பூனம் முத்ரேஜா கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பெண்களை அதிகாரிகள் கட்டாயப்படுத்தவோ மிரட்டவோ செய்கின்றனர். இது, அரசின் பாதுகாப்பு என்ற போர்வையில் சில அதிகாரிகள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை பிரதிபலிக்கிறது.

“தவறு செய்த அதிகாரிகள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் மேலும் குறைய வாய்ப்புள்ளது,’’ என்றார்.

குவு என்ற மகளிா் அமைப்பைச் சோ்ந்த பல்லவி கோஷ் கூறுகையில், “‘காவலில் வைக்கப்படும் பெண்கள், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய காவல்நிலையங்களிலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது தற்போது பொதுவானதாக உள்ளது.

“பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை பெண் காவலா்கள், இளநிலை காவல் துறை அதிகாரிகள் என யாரும் சிறிதளவும் புரிந்துகொள்வது இல்லை. இக் குற்றத்தில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்