22 ஆண்டுகாலம் தலைமறைவாகி, ஆசிரியராகப் பணியாற்றி வந்த பயங்கரவாதி கைது

22 ஆண்டுகாலம் தலைமறைவாகி, ஆசிரியராகப் பணியாற்றி வந்த பயங்கரவாதி கைது

படம்: ஊடகம்

26 Feb 2024 - 8:33 pm

1 mins read

புதுடெல்லி: 22 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். மராட்டிய மாநிலத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், காவலர்களின் பிடியில் சிக்கினார்.

தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஹனிப் ஷேக், 47. இவர், சிமி இயக்க செயல்பாடுகளுக்காக நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இவர் மீது கடந்த 2001ல் டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி காவல் நிலையத்தில் தேச துரோக வழக்குப் பதிவானது.

அதன்பின்னர், 2002ல் டெல்லி நீதிமன்றம் அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, தலைமறைவான ஹனிப் ஷேக் பற்றிய தகவல்கள், ஆதாரங்களை டெல்லி காவல் சிறப்புப் பிரிவுக் குழு நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று திரட்டி வந்தது.

அத்துடன் அவரைப் பொறி வைத்துப் பிடிக்க காவலர்கள் களத்தில் இறங்கினர்.

சம்பவத்தன்று, மராட்டிய மாநிலம், ஜல்காவ் மாவட்டம், புசாவல் நகரில் சந்தேகப்படும்படி இருந்த ஒருவரைக் காவலர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

ஹனிப் ஷேக் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு, புசாவல் நகரில் ஒரு உருது பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தலைமறைவாகி 22 ஆண்டுகள் கழித்து அவர் காவலர்கள் கையில் சிக்கிய செய்தி, அங்கு வசித்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்புச் சொற்கள்