2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவிற்குத் தனி ஆய்வு மையம்: மோடி

2 mins read
2a94e78c-4590-4b1a-a592-bf610acc9b6f
பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

திருவனந்தபுரம்: 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவிற்கு தனி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார்.

(இடமிருந்து) பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், ஷுபான்சு சுக்லா என்ற இந்த நால்வரே ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்குச் செல்ல இருக்கும் நால்வர்.
(இடமிருந்து) பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், ஷுபான்சு சுக்லா என்ற இந்த நால்வரே ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்குச் செல்ல இருக்கும் நால்வர். - படம்: இந்திய ஊடகம்

‘குரூப் கேப்டன்’களான பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் என்ற மூவரும் விங் கமாண்டராக இருக்கும் ஷுபான்சு சுக்லா என்பவருமே அந்த நால்வர்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “இன்று இந்த விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

“நாட்டின் சார்பாக அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்தான்.

“ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டுங்கள். விண்வெளி வீரர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

“விண்வெளி வீரர்களுக்கு யாரும் தொல்லை கொடுக்க வேண்டாம். அது அவர்களின் பணிகளுக்கு இடையூறாக அமைந்துவிடும். இந்தியாவின் விண்வெளித்துறை வளர்வதோடு பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

“ககன்யான் திட்டத்தில் பயன்படும் கருவிகள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரானவை.

“விண்வெளித்துறையில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது. நிலவில் தென் துருவ பகுதியான சிவசக்தி பாயிண்ட் இந்தியாவின் சக்தியை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது.

“இந்தியாவின் ககன்யான் திட்டம் விண்வெளித்துறையை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லப்போகிறது. சந்திரயான், ககன்யான் போன்ற விண்வெளிப்பயணங்களில் பெண்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.

“2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட் மூலம் இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பர். 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி ஆய்வு மையம் அமைய உள்ளது,” என்றார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்