கனடாவில் காலிஸ்தானிய சக்திகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது: ஜெய்சங்கர்

கனடாவில் காலிஸ்தானிய சக்திகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது: ஜெய்சங்கர்

படம்: இந்திய ஊடகம்

27 Feb 2024 - 5:04 pm

2 mins read

புதுடெல்லி: கனடாவில் இந்திய தூதரகங்கள் மீது புகை குண்டுகளை வீசக்கூடிய அளவுக்கு காலிஸ்தானிய சக்திகளுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறினார்.

கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு இந்தியா கண்டனம் வெளியிட்டு உள்ளது.

இதுபற்றி அமைச்சர் ஜெய்சங்கர் தனியார் ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “சான் பிரான்சிஸ்கோ நகரில் எங்களுடைய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என நம்புகிறோம்.

“லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்குள் புகுந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

“எங்களுடைய தூதர்களை, கனடாவில் மிரட்டிய நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

“2023 மார்ச் 19ஆம் தேதி காலிஸ்தானிய ஆதரவு சமூக விரோதிகள் சிலர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். கடந்த ஜூலையில், சான் பிரான்சிஸ்கோ நகரில் எங்களுடைய தூதரகம் மீது தீ வைக்க முயற்சி நடத்தப்பட்டது,” என்றார் அவர்.

கனடாவில் காலிஸ்தானிய சக்திகளுக்கு எந்தளவுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஜெய்சங்கர், கனடாவில் இந்தியத் தூதரகங்கள் மீது புகைக் குண்டுகளை வீசக்கூடிய அளவுக்கு உள்ளது என்று கூறினார்.

பேச்சு சுதந்திரம், ஜனநாயகம் உள்ளது என்று கூறிவிட்டு, கடமையைச் செய்துவரும் தூதர்களை அச்சுறுத்துவது என்பது அதனைத் தவறாக பயன்படுத்தும் விவகாரம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்