மீரட்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் வெடித்து இருவர் பலியானார்கள்.
அந்த மாநிலத்தின் மீரட் மாவட்டம் இன்சோலி என்னும் பகுதியில் டயர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தத் தொழிற்சாலையில், பயன்படுத்திய டயர்களை மறுசுழற்சி செய்து அவற்றிலிருந்து எண்ணெய் மற்றும் கம்பிகளை எடுக்கும் வேலை நடந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை எப்போதும்போல டயர் தொழிற்சாலையில் வேலை நடந்துகொண்டு இருந்தபோது திடீரென அங்கு இருந்த கொதிகலன் (பாய்லர்) வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மற்ற ஊழியர்கள் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயை சிரமப்பட்டு அணைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதிக அழுத்தம் காரணமாக கொதிகலன் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

