சென்னை: ரூ 2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தும் முக்கிய வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பொட்டலங்களில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக அந்த நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்திய காவல்துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டது.
அப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 15ஆம் தேதி காவல்துறை அந்தக் கிடங்கை சோதனையிட்டு சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபூர் ரகுமான், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் ஆகிய மூவரையும் கைது செய்தது.
இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே காவல்துறை தேடுவதை அறிந்த ஜாபர் சாதிக் தலைமறைவாகிவிட்டார்.
அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அழைப்பாணை ஒன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.
இதேபோல் புரசைவாக்கம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் அழைப்பாணை ஒட்டப்பட்டு உள்ளது.
போதைப்பொருட்கள் கடத்தல் பின்னணியில் ஜாபர் சாதிக்குடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரங்களை தனிப்படை காவல்துறை சேகரித்து வருகிறது.
ஜாபர் சாதிக் மூன்று கைப்பேசிகளை பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் அனைத்து கைப்பேசிகளும் அணைக்கப்பட்டுள்ளன.
மேலும் சினிமா தயாரிப்பாளராக இருந்த ஜாபர் சாதிக்கிற்கு சினிமா துறையிலும், அரசியல் பின்னணியிலும் நட்பு வட்டாரங்கள் பெரிய அளவில் உள்ளன. இதில் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் அவரது நண்பர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதனால் பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

