மாரடைப்பால் மாண்ட இளையர்; மனம் தாளாத மனைவியின் விபரீத முடிவு

மாரடைப்பால் மாண்ட இளையர்; மனம் தாளாத மனைவியின் விபரீத முடிவு

1 mins read
d337374e-41fa-42f1-8773-efbaa5f66b19
அபிஷேக், அஞ்சலி இருவரும் கடந்த நவம்பரில் திருமணம் செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: காஸியாபாத்தைச் சேர்ந்த இளம் தம்பதி அபிஷேக்-அஞ்சலியின் உயிரிழப்பு குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைந்த இருவரும், திங்கட்கிழமை (பிப்ரவரி 26) டெல்லியில் உள்ள விலங்கியல் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர்.

அப்போது அபிஷேக், 25, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறவே, மனைவி அஞ்சலி நண்பர்களின் உதவியுடன் அபிஷேக்கை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்.

பின்னர் அங்கிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அபிஷேக் மாரடைப்பால் மாண்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இரவு 9 மணியளவில் அபிஷேக்கின் நல்லுடல், தம்பதியின் வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் திடீரென்று அஞ்சலி, ஏழாம் மாடியிலிருந்த தங்கள் வீட்டு மாடத்திலிருந்து கீழே குதித்தார்.

கணவரின் அகால மரணத்தைத் தாங்க முடியாமல் அஞ்சலி திடீரென்று மாடத்தை நோக்கி ஓடியபோது உறவினர்கள் சுதாரித்துக்கொண்டு அவரைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை மாண்டார்.

குறிப்புச் சொற்கள்
டெல்லிதம்பதிஉயிரிழப்பு