தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவல்துறை உயர் அதிகாரி கடத்தல்; ராணுவம் குவிப்பு

2 mins read
db3c0610-7b1e-4ec8-bc5e-78c942c5f7b4
ஆரம்பை தெங்கோல், மைத்தேயி குழுக்களின் தலைவர் கொரௌங்கன்பா குமன் என்பவரது உரை கேட்க திரண்ட மக்கள் கூட்டம். கடந்த சனிக்கிழமை இம்பாலில் மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் திரு குமன் மக்களிடம் உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்

இம்பால்: மணிப்பூரில் காவல் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார். அதையடுத்து இம்பாலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் வைக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு இம்பால் மாவட்டத்தின் ஆரம்பை தெங்கோல், மைத்தேயி இன அமைப்பினைச் சேர்ந்தவர்களால் காவல் துறை உயர் அதிகாரி கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிப்பூர் காவல்துறை கூறுகையில், “இம்பால் கிழக்குப் பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான அமித் சிங், ஆயுதமேந்திய கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் பின்னர் மீட்கப்பட்டார்.

“மணிப்பூர் காவல் துறையின் செயல்பாட்டுப் பிரிவில் நியமிக்கப்பட்ட அமித் சிங்கின் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பை தெங்கோல் என்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

“வாகனங்களில் வந்த 200 பேர் அமித் சிங்கின் வீட்டில் நடத்திய இந்தத் தாக்குதலில் நான்கு வாகனங்கள் சேதமாகின.

தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரி அமித் சிங், ஒரு குழுவினருடன் வந்தார். அதனால்தான் அவர் கடத்தப்பட்ட சில நிமிடங்களில் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

“மீட்கப்பட்ட அதிகாரியான அமித் சிங் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக 6 பேரை அதிகாரி அமித் சிங் கைது செய்தார். அதனையடுத்தே அவர்கள் அந்த அதிகாரியைக் கடத்த முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

வாகனத் திருட்டுக் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட அந்த ஆறு பேரும் மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி மைத்தேயி இனப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிப்பூரில் மைத்தேயி, குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி கடுமையான மோதல் ஏற்பட்டது.

பின்னர் அந்தக் கலவரம் மணிப்பூரின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அந்தக் கலவரங்களில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

அந்தக் கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்