ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம்

ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம்

1 mins read
c158edc0-03f8-4fb8-b376-7c4769946b0c
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: ஆதார் அடையாள அட்டை முடக்கப்பட்டாலும் ஒருவர் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஏராளமான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் அவர்களால் வரும் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குழு, டெல்லி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தது.

மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன என்றும் அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து முடக்கப்பட்ட ஆதார் எண்கள் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் குழுவிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதி அளித்தார்.

மேலும், முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்றும் அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்