தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம்; மோடி அடிக்கல் நாட்டினார்

2 mins read
25d6c772-f339-4bfb-a22c-217a73d1d56a
ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் முருகக் கடவுள் சிலையைப் பரிசாக அளித்தார். - படம்: பிடிஐ

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (பிப்ரவரி 28) அடிக்கல் நாட்டினார்.

இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய 2,200 ஏக்கர் நிலப்பகுதியில் கட்டப்பட இருக்கும் இது இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் ஆகும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது.

அங்கிருந்துதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகள் சார்பாக செயற்கைக்கோள் ஏவப்பட்டு வருகின்றன.

இஸ்ரோவின் ஏவுதள வளாகம் தமிழ்நாட்டின் மகேந்திரகிரி மலையில் உள்ளது. இது தற்போதைய ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 780 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ஆனால், குலசேகரப்பட்டினம் மிக அருகில், அதாவது 88 கிலோமீட்டர் தெலைவில் உள்ளது.

புதிய ஏவுதளத்திற்கு குலசேகரப்பட்டினம் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு இது முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் ஏவுதளம் ‘எஸ்எஸ்எல்வி’ போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான தளமாகத் திகழும். சிறிய ரக ராக்கெட் பாகங்களையும் அங்கு உருவாக்க முடியும்.

இதனால், பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்டகாலம் காத்திருக்காமல் தேவைக்கு ஏற்பட உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் வர்த்தகரீதியாக மிகப்பெரிய லாபத்தை அரசாங்கம் அடையலாம் என்பதும் அவர்களின் கருத்து.

மேலும், தமிழ்நாட்டின் விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைக்கும் ஓர் ஊக்குவிப்பாக அந்தத் தளம் விளங்கும்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி புதன்கிழமை (பிப்ரவரி 28) காலை குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத் திட்டத்துடன் இதர பல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அந்தத் திட்டங்களின் மதிப்பு ரூ.17,300 கோடி.

தூத்துக்குடி வஉசி துறைமுக விரிவாக்கத் திட்டம், வெளித் துறைமுக சரக்குப் பெட்டக முனையங்கள் கட்டும் திட்டம், வடக்கு சரக்குக் கப்பல் தளம் எண் 3ஐ இயந்திர மயமாக்கும் திட்டம், தினமும் 5 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியன அந்தத் திட்டங்கள்.

குறிப்புச் சொற்கள்