ஹைதராபாத்: ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது.
ஆளும் கட்சியான ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு தொகுதிகளை மாற்றிக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெகன் மோகன்.
இதனால் கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளதாகவும் உட்கட்சிப் பூசல் உருவாகும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இதுவரை 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மகுந்தா சீனிவாசலு ஒய்.எஸ்.ஆர் கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த புதன்கிழமை அறிவித்தார். இதுகுறித்து பேசிய மகுந்தா, சுயமரியாதை கருதியே அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார். நம்முடைய சுயமரியாதைக்குப் பங்கம் வராமல் பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலஷெரி வல்லபனேனி, கே.ரகு ராமகிருஷ்ணன் ராஜு, எல். ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, சஞ்சீவ் குமார், வி. பிரபாகர் ஆகியோர் பதவியுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர்கள் முதற்கொண்டு, நகராட்சி, பஞ்சாயத்து, ஊராட்சி நிர்வாகிகள் வரை பலர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். ஆளும் கட்சியில் பதவி விலகல் படலம் தொடர்வதால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தெலுங்கு தேசம், ஜனசேனா
இந்நிலையில் அங்குள்ள எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்டது. தெலுங்கு தேசம், ஜன சேனா கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
ஷர்மிளா
இன்னொரு பக்கம் மாநில காங்கிரஸ் தலைவராக முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா களம் இறக்கி விடப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் படுவீழ்ச்சி அடைந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் கொடுத்து மீண்டும் தலைதூக்கி நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பு ஷர்மிளாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி அளிக்கப்படுவது குறித்து காங்கிரஸ் தரப்பில் மக்களுக்கு நான் வாக்குறுதி அளிக்க உள்ளேன் என்று காங்கிரஸ் கட்சியின் ஒய்.எஸ். ஷர்மிளா அறிவித்துள்ளார்.
மேலும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது தங்கை ஷர்மிளா, தேர்தல் பரப்புரையின்போது கடுமையான விமர்சனங்களுடன் தாக்கிப் பேசி வருகிறார். இது ஆளும் கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.