போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் திண்டோரி மாவட்டத்தில் புதன்கிழமை (28-02-24) இரவு, சிறிய சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேவேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, சரக்கு வாகனத்தில் வீடு திரும்பினர். அப்போது திண்டோரி மாவட்டத்தின் பட்ஜார் என்னும் சிற்றூர் அருகே அதிகாலை 1.30 மணியளவில் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் திண்டோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து ஆய்வு செய்ய மாநில அமைச்சர் சம்பதியா உய்கி, விபத்து நிகழ்ந்த இடத்திற்குச் செல்லவிருக்கிறார் என்று முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார்.