சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர், மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர். அதன்பின்னர் சட்டமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
“அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்யும்படி காங்கிரஸ் கட்சி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ‘வரவுசெலவுத்திட்ட அறிக்கை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும்படி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், 6 உறுப்பினர்களும் அதை மீறி, வெளியே இருந்தனர். அதனை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவேண்டும்,” என சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். ஆனால் அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்கவில்லை. ஒரு வாரம் அவகாசம் கேட்டனர்.
இந்நிலையில், கொறடா உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் இன்று அறிவித்தார். ரஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூட்டோ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

