புதுடெல்லி: மத்திய அரசுக்கு அனைத்து மாநிலங்களிலும் இருந்து கிடைக்கும் பல்வேறு வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான 3வது தவணையாக ரூ. 1.42 லட்சம் கோடி வரிப்பகிர்பு நிதியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தொடர்ந்து பீகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.11,157 கோடியும், மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.11,157 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.5,797 கோடி நிதியை மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் மேற்கு வங்கத்துக்கு ரூ.8,978 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி, ஆந்திரத்துக்கு ரூ.5,752 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.9564 கோடி, மணிப்பூருக்கு ரூ.1,018 கோடி, அருணாசலத்துக்கு ரூ.2,497 கோடி, அஸ்ஸாம் ரூ.4,446 கோடி, கோவா ரூ.549 கோடி, குஜராத் ரூ.4,943 கோடி, ஜார்க்கண்ட் ரூ.4,700 கோடி, கர்நாடகம் ரூ.5,183 கோடி, கேரளத்துக்கு ரூ.2,736 கோடி, மிசோரம் 7,11 கோடி, சிக்கிம் ரூ.551 கோடி என ரூ.1.42 லட்சம் கோடி வரிப் பகிர்வாக மத்தியில் ஆளும் பாஜக அரசு விடுவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது. அண்மையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிதிப் பங்கீடு தொடர்பாக மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வரி வருவாயைப் பகிர்வதில் குறைவான வரியே பகிரப்படுவதாக தமிழ்நாடு குறிப்பிட்டுவந்த நிலையில், வேறு பல தென் மாநிலங்களும் இந்தக் குரலை எழுப்பியுள்ளன. தென் மாநிலங்களுக்கு இடையில் பொருளாதார கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயல்வதாக சொல்கிறது கர்நாடகா.
கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்களுடைய வரி வருவாயில் இருந்து மிகக் குறைவான நிதியே தங்களுக்குப் பகிரப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இதேபோன்ற குற்றச்சாட்டுகளை பிற தென் மாநிலங்களும் கூற ஆரம்பித்துள்ளன. இதன் உச்சகட்டமாக தென்மாநிலங்களின் பொருளாதார கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயல்வதாக கர்நாடகா கூற ஆரம்பித்திருக்கிறது.
இதேபோல, மாநில நிதி உரிமையை வலியுறுத்தி, பிப்ரவரி 8ஆம் தேதி கேரள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அவர்களுடைய குமுறலாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசும், தெலுங்கானா மற்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசும், கேரளாவில் இடதுசாரியும் ஆட்சியில் உள்ளன.
இவையனைத்தும் பாஜகவைச் சார்ந்து இல்லாத ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும். அதுபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்தக் கட்சியும் நிதிப் பிரச்சினையில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனாலும், இந்த விஷயத்தில் தென்மாநிலங்கள்தான் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மத்திய அரசுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன.