நாக்பூர் சாலையோரக் கடையில் தேநீர் குடித்த உலகக் கோடீஸ்வரர் பில்கேட்ஸ்

2 mins read
36d93e9e-949d-4663-9ada-79874b076fd8
பில்கேட்சுக்கு தேநீர் கொடுத்த தேநீர் கடைக்காரர். - படம்: ஊடகம்

நாக்பூர்: நாக்பூர் மாவட்ட சாலையோரக் கடையில் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தேநீர் குடித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்தார் பில் கேட்ஸ்.

நாக்பூரில் சாலையோரம் டோலி சாய்வாலா என்பவர் தேநீர் கடை வைத்துள்ளார். யூடியூப் பிரபலமான இவரது கடைக்குச் சென்ற பில் கேட்ஸ் ஒரு தேநீர் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.

ஆனால், தனது கடைக்கு வந்திருப்பவர் பில் கேட்ஸ் என்றோ, உலகப் பணக்காரர்களில் முக்கியமான ஒருவர் என்றோ டோலி சாய்வாலாவுக்குத் தெரியாது.

இந்நிலையில், “இந்தியாவில் திரும்பும் திசை எங்கும் புதுமையைக் காணலாம். அதில் ஒன்றுதான் இந்த தேநீர் தயாரிப்பு,” என்று பில்கேட்ஸ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

தனித்துவமான முறையில் தேநீர் போடுவதில் வல்லவரான டோலி சாய்வாலா, இஞ்சி, ஏலக்காய் தட்டிப்போட்டு சுவையான தேநீர் ஒன்றை பில் கேட்ஸ் கையில் கொடுக்க, அதனை ருசிப்பவர் அப்படியே மெய்மறந்து போகிறார்.

பில்கேட்ஸ் தேநீரை அருந்தும்போதுகூட டோலி சாய்வாலாவுக்கு நாம் ஒரே நாளில் ஒபாமா போல் புகழ்பெறப் போகிறோம் என்பதெல்லாம் தெரியாது.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியபோதுதான் இந்த உண்மை அவருக்குத் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து பல்வேறு ஊடகங்களும் டோலி சாய்வாலாவிடம் நேர்காணல் நடத்தி அவரது அனுபவத்தைப் பகிர்ந்து வருகின்றன.

“என்னிடம் வந்து தேநீர் கேட்டவரைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர் என்னிடம் தேநீர் கேட்டதும் ஒரு சுவையான தேநீரைத் தயாரித்துக் கொடுப்பதிலேயே எனது முழு கவனமும் இருந்தது. அவர் இவ்வளவு பெரிய ஆள், இதுபோன்ற ஒருவரை நான் என் வாழ்க்கையில் சந்திப்பேன் என்று நினைக்கவேயில்லை,” என உணர்ச்சிப் பெருக்குடன் ஊடகங்களிடம் பேசியுள்ளார் டோலி சாய்வாலா.

பிரதமா் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு

பிரதமா் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மைக்ரோசாஃப்ட் நிறுவனா் பில் கேட்ஸ் சந்தித்துப் பேசினார்.

இதுதொடா்பாக பில் கேட்ஸ் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமா் மோடியைச் சந்தித்ததில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி. எண்ம பொது உள்கட்டமைப்பு, பொதுநலனுக்கான செயற்கை நுண்ணறிவு, பெண்கள் முன்னேற்றம், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள், சுகாதாரம், பருவநிலை உள்ளிட்ட துறைகளில் இந்தியா பின்பற்றும் முறைகளை உலகுக்கு எடுத்துரைப்பது குறித்து இருவரும் ஆலோசித்தோம்,” எனக் குறிப்பிட்டாா்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “உலக அளவில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை மேம்படுத்தி பூமியை சிறப்பாக்கும் பல்வேறு துறைகள் குறித்து ஆலோசித்ததில் அளவற்ற மகிழ்ச்சி,” என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்