கர்ப்பிணிக்கு சாலையில் பிரசவம் பார்த்த தாதியர்க்கு தலா ரூ.51,000 வெகுமதி

1 mins read
ad92a6d6-ff26-4c21-88ea-c14c4eae56b3
குழந்தை பெற்றெடுத்த பின்னர் ரோஷினி. கர்ப்பிணிக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்த தாதியர். - படம்: டுவிட்டர்

நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் ரோஷினி என்ற கர்ப்பிணிப் பெண் தனது கணவர் பிரசாந்த் சர்மாவுடன் சாலையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்குப் பிரசவ வலி ஏற்பட, பதறிப்போன கணவர் பிரசாந்த், அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த தாதியர் ரேணுதேவி, ஜோதி ஆகிய இருவரும் ரோஷினிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

சாலையிலேயே கர்ப்பிணியைச் சுற்றிலும் துணிகளால் மறைவிடம் அமைத்து பிரசவம் பார்த்ததில், கடும் சிரமத்திற்குப் பின்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, தாங்கள் பணிபுரியும் சாரதா மருத்துவமனையிலேயே தாய், சேய் இருவரையும் சிகிச்சைக்காக தாதியர்கள் அனுமதித்தனர்.

இதனையறிந்த மருத்துவமனை நிர்வாகம் கர்ப்பிணியின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றியதற்காக ரேணுதேவி, ஜோதி ஆகிய இருவருக்கும் தலா ரூ.51,000 வெகுமதியாக அளித்து, பாராட்டி உள்ளது. தாதியர்களுக்கு பொதுமக்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்