சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆறு பேரும் தங்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் இந்த ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சபாநாயகர் குல்தீப் சிங் பதனியா வியாழக்கிழமை தகுதி நீக்கம் செய்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் இந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆறு பேரும் தங்களது கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்காமல் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதையடுத்து, அத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தலா 34 வாக்குகளைப் பெற்றனர். அதன்பிறகு குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜீந்தர் ராணா, சுதீர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் புட்டோ, ரவி தாக்கூர், சைதன்யா சர்மா ஆகிய ஆறு பேரையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து ஆறு அதிருப்தி எம்எல்ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்தத் தகுதி நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியாகியுள்ளன.
இதனால் இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40லிருந்து 34ஆகக் குறைந்துள்ளது. பாஜக வசம் 25எம்எல்ஏக்கள் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு தற்போது குறைந்துள்ளதாக கர்நாடக மாநிலத் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியபோது, “அனைத்து உட்கட்சி முரண்பாடுகளும் களையப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் உட்கட்சி முரண்பாடுகள் ஏற்பட்டால் அதனை தணிப்பதற்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு அதன் முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யும். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அனைத்து எம்எல்ஏக்களும் உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்,” எனத் தெரிவித்தார்.

