தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெங்களூரு வெடிகுண்டுத் தாக்குதல்: விசாரணை, பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன

2 mins read
3c18b9ba-d898-4564-8284-77928221d006
வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட ‘ராமேஸ்வரம் கஃபே’யில் பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற உணவகமான ‘ராமேஸ்வரம் கஃபே’யில் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 1) வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேருக்கு மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை தெரிவித்தது.

அடையாளம் தெரியாத ஒருவர் வெடிகுண்டு அடங்கிய பையை உணவகத்தில் விட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்பு அவர் அந்த உணவகத்தில் உணவருந்தியதாக அதிகாரிகள் கூறினர்.

அவருக்கு 25 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முகமூடி அணிந்திருந்த அந்த ஆடவர் பேருந்திலிருந்து இறங்கி, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் உணவகத்துக்குள் நுழைந்ததாகக் கண்காணிப்பு கேரமாக்களில் பதிவான காட்சிகள் காட்டுகின்றன.

இந்தக் காணொளி காட்சிகளைப் புலன்விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஒரு தட்டு ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு தம்முடன் கொண்டு வந்த பையை அங்கேயே விட்டுவிட்டு அந்த ஆடவர் உணவகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, வெடிகுண்டு வெடித்ததாக அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முகமூடி அணிந்திருந்த அந்த ஆடவரை அடையாளம் காண பெங்களூரு காவல்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

வெடிகுண்டுச் சம்பவம் குறித்து மத்திய குற்றவியல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும் சந்தேக நபரைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

சந்தேக நபர் ஓரிரு நாள்களில் கைது செய்யப்படுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் .

பாதிக்கப்பட்டோருக்கு ஏற்பட்ட காயங்களைப் பார்க்கும்போது தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சக்திவாய்ந்ததல்ல என்றும் குறைந்த தீவிரமுடையது என்றும் பெங்களூருவில் உள்ள புரூக்ஃபீல்ட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தப்ப முடியாது என்றும் அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

வெடிகுண்டுத் தாக்குதலை அடுத்து, பெங்களூரு உயர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் யாரும் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்தார்களா என தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க எட்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

நெரிசலான பகுதிகளில், குறிப்பாக டெல்லியின் சந்தைகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படுவதை உறுதி செய்துகொள்ளும்படி சந்தை சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெடிகுண்டு செயலிழக்கும் குழுக்கள், வெடிகுண்டு கண்டறியும் குழுக்களை விழிப்புடன் இருக்கும்படியும் டெல்லி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்