தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 250 பெண்களிடம் பணம் பறித்த ஆடவர்

2 mins read
1a16513f-080c-4a5f-b1ba-b9823dd27bed
நரேஷ்புரி கோஸ்வாமி. - படம்: ஊடகம்

பெங்களூரு: கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமண வலைத்தளம் மூலமாக பெங்களூரில் வசிக்கும் நரேஷ்புரி கோஸ்வாமி, 45, என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

விமான நிலைய சுங்கத் துறை அதிகாரியாக வேலை பார்த்து வருவதாகக் கூறிய நரேஷ்புரி, இளவயது ஆடவர்போல் பெண்ணிடம் கைப்பேசியில் தொடர்ந்து பேசிவந்துள்ளார்.

பின்னர், பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது தொடர்பாக பேசவேண்டும் எனக் கூறி பெங்களூருக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதனைக்கேட்டு மன மகிழ்ச்சியோடு கோவையில் இருந்து பெங்களூர் ரயில் நிலையம் வந்து, நரேஷ்புரியைத் தொடர்புகொண்டுள்ளார்.

அப்போது, “இப்போது நான் வரமுடியாத நிலையில் இருக்கிறேன். என் சித்தப்பாவை அனுப்புகிறேன். அவர் பணப்பையை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டார். அவர் கேட்கும் பண்ததைக் கொடுங்கள். நான் அதைக் கொடுத்து விடுகிறேன்,” எனக் கூறியுள்ளார்.

பணத்தைப் பெற்றுச் சென்ற நரேஷ்புரியின் சித்தப்பா திரும்பி வரவே இல்லை.

நரேஷ்புரியின் கைப்பேசியும் அணைக்கப்பட்டு விட்டது. அதன்பிறகுதான் பெண்ணுக்குத் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தப் பெண் ரயில்வே காவலர்களிடம் புகார் அளித்தார். நரேஷ்புரியைக் கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

இவர் போலியான மேட்ரிமோனி இணையத்தளத்தை உருவாக்கி, 250க்கும் மேற்பட்ட பெண்களுக்குத் திருமண ஆசை காட்டி, லட்சக்கணக்கிலான பணத்தைப் பறித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

குறிப்பாகத் திருமணமாகி, விவாகரத்தான பெண்களைக் குறிவைக்கும் இவர், அவர்களைத் திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து, பெங்களூருக்கு வரவழைத்து பணம் பறித்துள்ளார்.

இவர்களில் ராஜஸ்தான் - 56, உத்தரப்பிரதேசம் - 32, டில்லி - 32, கர்நாடகா - 17, மத்தியப் பிரதேசம் - 16, மகாராஷ்டிரா - 13, குஜராத் - 11 உட்பட 250 பெண்களை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்