புதுடெல்லி: பொது இடங்களில் சுற்றித்திரிந்து கண்ணில்படுவோரிடம் எல்லாம் உணவும் பணமும் கேட்டு இரந்து வாழும் 1,300 பிச்சைக்காரர்களை மீட்டு, அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து வருகிறது டெல்லி அரசு.
இதன்மூலம் மீண்டும் அவர்கள் யாரிடமும் கையேந்தாமல் அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களையும் ஒரு அங்கமாக ஒருங்கிணைக்க பல துறைகளையும் சார்ந்த ஒரு குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
டெல்லியில் கடந்தாண்டு நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது, ஆயிரத்துக்கும் மேலான யாசகர்கள் தலைநகர் டெல்லியில் யாசகம் கேட்டுப் பிழைப்பதைக் கண்டறிந்த டெல்லி அரசு, அவர்களுக்கு மறுவாழ்வு தர முடிவெடுத்தது.
யாசகம் பெறுவோரில் ஆண்களைவிட பெண்களும் குழந்தைகளும் கடும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழலில், பெண்கள் தம் சொந்தக்காலில் நிற்கவும் குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடரவும் இக்குழுவினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதையடுத்து, டெல்லி நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் இயக்கப்படும் தங்குமிடங்களில் வீடற்ற இந்த யாசகர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு சமூக நலத்துறை வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதற்காக டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தினர், காவலர்கள், பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சமூக நலத்துறை ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுவினர் ஒன்றிணைந்து யாசகர்களின் மறுவாழ்வுக்கான உத்திகளை வகுத்தனர்.
முன்னதாக இக்குழுவினர் மேற்கொண்ட கணக்கெடுப்பில் வீடற்ற 1,312 யாசகர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவர்கள் அனைவருக்கும் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, பொருளாதாரத்தில் மேம்பாடு கண்டு, சமூகத்தில் ஒன்றிணைந்து வாழவும் வழிவகை செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
டெல்லி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அதிஷி சனிக்கிழமை சமர்ப்பித்த பொருளாதார ஆய்வறிக்கையில் இதுகுறித்த தரவுகள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

