இரவுக் காவலாளிக்கு ஒரே நேரத்தில் கிடைத்த இரண்டு அரசு வேலை

இரவுக் காவலாளிக்கு ஒரே நேரத்தில் கிடைத்த இரண்டு அரசு வேலை

2 mins read
1bb1a161-8b58-4374-befc-a46ad61f5f21
இரவுக் காவலாளியாகப் பணிபுரிந்து இரு தேர்வுகளில் வெற்றிபெற்ற கொல்லே பிரவீன் குமார். - படம்: ஊடகம்

ஹைதராபாத்: இரவுக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த இளையர் ஒருவர், ஒரே நேரத்தில் அரசு நடத்திய இரு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம், மன்சேரியல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லே பிரவீன் குமார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர் எம்.காம்., பி.எட்., எம்.எட்., போன்ற பட்டப் படிப்புகளை முடித்துள்ளார்.

எனினும், உடனடியாக நல்ல வேலை எதுவும் கிடைக்காததால், போட்டித் தேர்வுக்கான படிப்புச் செலவைச் சமாளிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரவுக் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

இரவில் கிடைக்கும் ஓய்வு நேரத்தையும் பகலில் தூங்கும் நேரத்தையும் தியாகம் செய்துவிட்டு போட்டித் தேர்வுக்குத் தயாராகி இரு தேர்வுகளை எழுதி அவற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது முதுகலை ஆசிரியர், இளநிலை விரிவுரையாளர் என இரு வேலைகள் அவருக்கு கிடைத்துள்ளன. இவற்றில் பிடித்த ஒரு வேலையை மட்டுமே தேர்ந்தெடுக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.

காவலாளிப் பணி மூலம் மாதம் ரூ. 9 ஆயிரம் மட்டுமே சம்பாதித்து வந்த பிரவீன், இனிமேல் ரூ.80 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்க உள்ளார்.

தனது வெற்றி குறித்து பேசிய பிரவீன், ​​“போட்டித் தேர்வில் மட்டுமே எனது முழுக்கவனமும் இருந்தது. படிப்பதற்கு ஒரு அறை, புத்தகங்கள், படிப்புச் செலவுக்கு பணம் என மூன்றும் இருந்ததால் தேர்வில் வெற்றிபெற முடிந்தது.

“எனினும், இரு தேர்வுகளிலும் வெற்றிபெறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை,” என்றார்.

குறிப்புச் சொற்கள்