விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், கண்டகபள்ளி அருகே கடந்த ஆண்டு நிகழ்ந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணிகள் ரயிலும் அதே வழித்தடத்தில் வந்த பலாசா ரயிலும் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கின.
தென்னிந்தியாவை உலுக்கிய இந்தக் கோர விபத்துக்கு ஒரு ரயிலின் ஓட்டுநரும் உதவியாளரும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு ரயிலை இயக்கியதே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே எடுத்து வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பி.டி.ஐ. ஊடகத்திடம் அஸ்வினி வைஷ்ணவ் பேசியபோது, “ஆந்திர மாநிலத்தில் இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
“இதில் ஒரு ரயிலின் ஓட்டுநரும் உதவி ஓட்டுநரும் கிரிக்கெட் போட்டியை கைப்பேசியில் பார்த்துக்கொண்டே பணிபுரிந்துள்ளனர். இதனால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது.
“இப்போது இதுபோன்ற கவனச்சிதறல்களைக் கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை நிறுவி வருகிறோம்.
“ஓட்டுநர்களும் உதவி ஓட்டுநர்களும் ரயிலை பாதுகாப்பாக இயக்குவதில் முழுமையாக கவனம் செலுத்துவதையும் உறுதி செய்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூல காரணத்தைக் கண்டறிந்து, மீண்டும் அவை நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆந்திர ரயில் விபத்துக்கு காரணமான இரு ஊழியர்களும் அதில் பலியாகி விட்டனர்,” என்று கூறினார்.