தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காணாமல் போன ஐபோன் கைப்பேசியை 3 மணி நேரத்தில் மீட்டுத் தந்த காவலர்கள்

1 mins read
bdf9af9a-02df-462e-a8a8-a24b057b36c2
மூன்று காவலர்களுடன் தம்படம் எடுத்துக்கொண்ட ஏக்தா தாக்கூரும் அவரது தோழியும். - படம்: எக்ஸ் ஊடகம்

புதுடெல்லி: டெல்லி காவலர்கள் மூன்று மணி நேரத்தில் ஏக்தா தாக்கூர் என்ற பெண்ணின் தொலைந்துபோன ஐபோன் கைப்பேசியை மீட்டுக் கொடுத்துள்ளனர். இதற்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள முனிர்கா பகுதியைச் சேர்ந்தவர் ஏக்தா தாக்கூர். இவர் தனது ஐபோன் கைபேசி காணாமல் போனது குறித்து டெல்லி காவலர்களிடம் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து காவலர்கள் உடனடியாக விசாரணை நடத்தி 3 மணி நேரத்தில் ஏக்தா தாக்கூரின் ஐபோன் கைப்பேசியை மீட்டுக்கொடுத்துள்ளனர்.

​“ஆட்டோவில் என் கைப்பேசி காணாமல் போனதாக நான் கூறியது முதல் எனது கைப்பேசியை திரும்ப மீட்பதில் காவலர்கள் அதிக ஆர்வமாக இருந்தனர். ஜியோவின் பதிவுகளில் இருந்து ஐஎம்இஐ எண்ணைப் பெற்று, கைப்பேசி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து மூன்று மணி நேரத்தில் மீட்டுத் தந்தனர்,” என்று ஏக்தா தாக்கூர் கூறியுள்ளார்.

இதையடுத்து, எக்ஸ் தளத்தில் காவலர்கள் மூவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியைப் பகிர்ந்து, தொலைந்துபோன எனது ஐபோனை 3 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த காவலர்களுக்கு மிக்க நன்றி. டெல்லியை பாதுகாப்பாக வைத்திருக்கும் காவலர்களின் தொடர் சேவைக்கு கடமைப்பட்டிருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது இப்பதிவு இணையத்தில் பரவி, வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

“ஏக்தா ஜி, உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் எங்கள் சேவையைப் பாராட்டியதற்கும் நன்றி,” என்று டெல்லி காவல்துறையும் ஏக்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்