வாரணாசி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாகப் போட்டியிடுவதை அடுத்து, பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், பாஜக 195 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், 28 பெண்கள், 27 பட்டியலினத்தவர்கள், ஓபிசி பிரிவைச் சேர்ந்த 57 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர், “மூன்றாவது முறையாக காசியில் உள்ள எனது சகோதரிகள், சகோதரர்களுக்குச் சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
“பாஜக தலைமைக்கு நன்றி. என் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்த கோடிக்கணக்கான தன்னலமற்ற கட்சியினருக்கும் தலைவணங்குகிறேன்,” எனப் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
உ.பி.யில் ராஜ்நாத் சிங், ஹேம மாலினி, ஸ்மிருதி இரானி போட்டி
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிட உள்ள நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் போட்டியிடுகிறார்.
அமேதியில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, கோரக்பூரில் ரவி கிஷன் ஆகியோர் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா கவுதம் புத் நகரிலும் நடிகை ஹேம மாலினி மதுராவிலும் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனிடையே, புதுச்சேரி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வேட்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.