புதுடெல்லி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மருத்துவராகப் பணியாற்றப் போவதாக அவர் கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தார் ஹர்ஷ்வர்தன். டெல்லி மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லி சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
2019ஆம் ஆண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்ற அவருக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு அவர் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சாந்தினி சௌக் தொகுதிக்கு வேறு வேட்பாளரை அறிவித்துள்ளது பாஜக தலைமை. இதையடுத்து தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஹர்ஷ்வர்தன்.
தமது மருத்துவமனை டெல்லியில் சிறப்பாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அங்கு மீண்டும் தமது மருத்துவச் சேவையைத் தொடர உள்ளதாகக் கூறியுள்ளார்.

