முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்றவர்

முனைவர் பட்டம் பெற்ற பார்வையற்றவர்

படம்: இந்திய ஊடகம்

06 Mar 2024 - 7:08 pm

1 mins read

அகமதாபாத்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் 42 வயது தருண் குமார் வசிஷ்த்.

அண்மையில், அகமதாபாத்தில் உள்ள ‘ஐஐஎம்’ எனப்படும் இந்திய நிர்வாகக் கல்விக்கழகத்தில் இவர் முனைவர் பட்டம் பெற்றார்.

இந்தக் கல்விக்கழகத்தில் பார்வையற்ற மாணவர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றது இதுவே முதல்முறை.

இந்திய நிறுவனங்களில் பார்வையற்ற ஊழியர்களின் அனுபவங்கள் குறித்து தருண் ஆய்வு செய்தார்.

இம்மாதப் பிற்பகுதியில் புத்த கயாவில் உள்ள ‘ஐஐஎம்’ கல்விக்கழகத்தில் இவர் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேரவிருப்பதாகக் கூறப்பட்டது.

உடற்குறை ஏதும் இல்லாத மாணவர்கள் பயிலும் கல்விக்கழகம் ஒன்றில் பார்வையற்ற ஆசிரியர் ஒருவர் கற்பிக்க இருப்பது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டது.

“அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினரும் என்னைச் சுற்றியுள்ளோரும் தரும் ஆதரவால் எனக்குக் குறை இருப்பதாகவே நான் உணரவில்லை. வழக்கமான பள்ளியில்தான் பயின்றேன். பொதுவாக பார்வையற்ற மாணவர்களுக்குக் கணிதம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை. ஆனால் நான் அத்தகைய பாடங்களையும் பயின்றேன்,” என்று தருண் குறிப்பிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

‘ஐஐஎம்’ அகமதாபாத், 2018ஆம் ஆண்டில் பொதுப்பிரிவின்கீழ் இவரை முனைவர் பட்டக் கல்வியில் சேர்த்துக்கொண்டது. கல்வித் திட்ட நடைமுறைகளில் அது செய்து தந்த மாற்றங்கள் தனக்கு உந்துசக்தியாக விளங்கியதாகக் கூறுகிறார் தருண்.

குறிப்புச் சொற்கள்