தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுத்தையை அறையில் அடைத்த சிறுவன்

1 mins read
e42522d2-2349-42be-a8b8-c68180818a72
சிறுவன் கைத்தொலைபேசியை மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது சிறுத்தை அந்த அறையினுள் நுழைந்தது. - படம்: ஆஸ்க்அன்ஷுல்/எக்ஸ்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் 12 வயதுச் சிறுவன் ஒருவன், அலுவலக அறைக்குள் புகுந்த சிறுத்தையை அறைக்குள் பூட்டிய செயல் இணையத்தில் பலரின் பாராட்டைப் பெற்றுவருகிறது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) காலை, மலிகான்-நம்பூர் சாலையிலுள்ள ‘சாய் செலிப்ரேஷன்’ திருமண மண்டபத்தில் நடந்தது.

சிறுவனின் தந்தை, அந்த மண்டபத்தில் பாதுகாவல் பணியாளராக வேலை செய்கிறார்.

அலுவலக அறையில் கைத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், சிறுத்தை நுழைந்ததும் சத்தமின்றி நழுவி, உடனடியாக அறையைப் பூட்டினான்.

பின்னர், அந்த அழையா விருந்தாளி பற்றித் தன் தந்தையிடம் தெரிவித்தான்.

ஏற்கெனவே அந்த வட்டாரக் குடியிருப்பில் சிறுத்தை நடமாட்டம் குறித்துத் தரப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் அதைத் தேடிவந்தனர்.

சிறுவன் பூட்டியதைத் தொடர்ந்து அதிகாரிகள் மயக்க மருந்தின் உதவியுடன் அந்த ஐந்து வயதுச் சிறுத்தையைப் பாதுகாப்பாக மீட்டனர்.

மோகித் அஹிரே எனும் அச்சிறுவன் சிந்தித்து, விரைந்து செயலாற்றியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்