புதுடெல்லி: இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ராணுவத்துக்கு ஏறக்குறைய ரூ.8,000 கோடியில் 34 துருவ் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இவற்றில் ஒன்பது ஹெலிகாப்டர்கள் இந்தியக் கடலோரக் காவல்படையிலும் 25 ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திலும் பயன்படுத்தப்பட உள்ளன.
இவ்விரண்டு திட்டங்களும் ரூ.8,000 கோடி மதிப்புடையதாக இருக்கும் என்றும் உள்நாட்டில் தயாரிக்கும் திட்டத்துக்குப் பெரும் ஊக்கமளிக்கும் என்றும் பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்தும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும்.
“பாதுகாப்புத் துறையில் 34 புதிய மேம்பட்ட இலகு ரக (ஏஎல்எச்) துருவ் ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டத்துக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
“இதன்மூலம் இந்தியக் கடலோரக் காவல்படையில் உள்ள பழைய இலகு ரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களை மாற்றுவதற்கு திட்டம் வழிகோலும்.
“அதேபோல், இந்திய ராணுவமும் பல்வேறு தேவைகளுக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது. அதற்கும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்,” என்று பாதுகாப்புத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

